ஆதியாகமம் 50
1 அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தம்செய்தான். 2 பின்பு, தன் தகப்பனுடைய உடலைப் பதப்படுத்தும்படி யோசேப்பு தன் வேலைக்காரர்களாகிய வைத்தியர்களுக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர்கள் இஸ்ரவேலைப் பதப்படுத்தினார்கள். 3 பதப்படுத்த 40 நாட்கள் ஆகும்; அப்படியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர்கள் அவனுக்காக 70 நாட்கள் துக்கம் அனுசரித்தார்கள். 4 துக்கம் அனுசரிக்கும் நாட்கள் முடிந்தபின், யோசேப்பு பார்வோனின் குடும்பத்தாரை நோக்கி: “உங்கள் கண்களில் எனக்கு தயவுகிடைத்ததானால், நீங்கள் பார்வோனுடைய காது கேட்க அவருக்கு தெரிவிக்கவேண்டியது என்னவென்றால், 5 என் தகப்பனார் என்னை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; கானான் தேசத்திலே நான் எனக்காக வெட்டிவைத்திருக்கிற கல்லறையிலே என்னை அடக்கம் செய்யவேண்டும் என்று என்னிடத்தில் சொல்லி, உறுதிமொழி வாங்கிக்கொண்டார்; நான் அங்கே போய், என் தகப்பனை அடக்கம்செய்து வருவதற்கு அனுமதிகொடுக்க வேண்டிக்கொள்ளுகிறேன் என்று சொல்லுங்கள்” என்றான். 6 அதற்குப் பார்வோன்: “உன் தகப்பன் உன்னிடத்தில் உறுதிமொழி வாங்கிக்கொண்டபடியே, நீ போய், அவரை அடக்கம்செய்து வா” என்றான். 7 அப்படியே யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்செய்யப் போனான். பார்வோனுடைய அரண்மனையிலிருந்த பெரியவர்களாகிய அவனுடைய அனைத்து உயர் அதிகாரிகளும் எகிப்துதேசத்திலுள்ள அனைத்து பெரியோரும், 8 யோசேப்பின் வீட்டார் அனைவரும், அவனுடைய சகோதரர்களும், தகப்பன் வீட்டாரும் அவனோடுகூடப் போனார்கள். தங்கள் குழந்தைகளையும், தங்கள் ஆடுமாடுகளையும்மாத்திரம் கோசேன் நாட்டிலே விட்டுப் போனார்கள். 9 இரதங்களும் குதிரைவீரரும் அவனோடு போனதினால், மக்கள்கூட்டம் மிகவும் அதிகமாயிருந்தது. 10 அவர்கள் யோர்தானுக்கு மறுகரையில் இருக்கிற ஆத்தாத்தின் போர்க்களத்திற்கு வந்தபோது, அந்த இடத்திலே பெரும் புலம்பலாகப் புலம்பினார்கள். அங்கே தன் தகப்பனுக்காக ஏழுநாட்கள் துக்கம் அனுசரித்தான். 11 ஆத்தாத்தின் களத்திலே துக்கம் அனுசரிக்கிறதை அந்த தேசத்தின் குடிமக்களாகிய கானானியர்கள் கண்டு: “இது எகிப்தியருக்குப் பெரிய துக்கம் அனுசரித்தல்” என்றார்கள். அதனால் யோர்தானுக்கு அப்பால் இருக்கிற அந்த இடத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்னும் பெயர் உண்டானது. 12 யாக்கோபின் மகன்கள், தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே, 13 அவனைக் கானான் தேசத்திற்குக் கொண்டுபோய், ஆபிரகாம் மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்திலே தனக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாக ஏத்தியனான எப்பெரோனிடத்தில் வாங்கின நிலத்திலுள்ள குகையிலே அவனை அடக்கம்செய்தார்கள்.