எபிரெயர் 6
1 ஆகவே, கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய அடிப்படை உபதேசவசனங்களை நாம்விட்டுவிட்டு, செத்த செய்கைகளைவிட்டு மனம்திரும்புதல், தேவன்மேல் வைக்கும் விசுவாசம், 2 ஞானஸ்நான உபதேசம், கரங்களை வைத்தல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்ற உபதேசங்களாகிய அஸ்திபாரத்தை மீண்டும் போடாமல், தேறினவர்களாகும்படி கடந்துபோவோம். 3 தேவனுக்கு விருப்பமானால் இப்படியே செய்வோம். 4 ஏனென்றால், ஒருமுறை பிரகாசிக்கப்பட்டும், பரலோக பரிசை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியானவரைப் பெற்றும், 5 தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், 6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மீண்டும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறதினால், மனந்திரும்புவதற்காக அவர்களை மீண்டும் புதுப்பிக்கிறது முடியாதகாரியம். 7 எப்படியென்றால், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழைநீரைக் குடித்து, தன்னிடம் பயிரிடுகிறவர்களுக்குத் தேவையான பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். 8 முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ மதிப்பில்லாததும், சபிக்கப்படுகிறதாகவும் இருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு. 9 பிரியமானவர்களே, நாங்கள் இப்படிச் சொன்னாலும், நன்மையானவைகளும் இரட்சிப்பிற்குரிய காரியங்களும் உங்களிடம் உண்டாயிருக்கிறதென்று நம்பியிருக்கிறோம். 10 ஏனென்றால், உங்களுடைய செயல்களையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் அவருடைய நாமத்திற்காகக் காண்பித்த உங்களுடைய அன்பையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவர் இல்லையே. 11 நீங்கள் அசதியாக இல்லாமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் அதிக பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து, 12 உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயம் உண்டாக நீங்கள் எல்லோரும் முடிவுவரைக்கும் அதிக கவனத்தைக் காண்பிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறோம்.